லேவியராகமம் 16:5-22
“மேலும், தமது மூலமாய்த் தேவனிடத்தில் சேருகிறவர்களை முற்றுமுடிய இரட்சிக்க வல்லவராயுமிருக்கிறார்.” (எபிரெயர் 7:25)
R4035 : page 231
இரண்டு வெள்ளாட்டுக்கடாக்கள்மீது சீட்டுப்போடுதல் – SUB HEADING
கூடாரத்தின் வாசலில் நின்றுகொண்டிருக்கும் இரண்டு வெள்ளாட்டுக்கடாக்கள், இந்தத் தற்காலத்திலுள்ள கர்த்தருடைய அர்ப்பணிக்கப்பட்ட சபை யாவருக்கும் அடையாளமாயிருக்கின்றது; எனினும் அது இரண்டு வகுப்பாரைக் கொண்டிருக்கின்றது என்பதையும் நமக்குக் காட்டுகின்றது. இரண்டு வகுப்பாரும் ஒன்றுபோல் அர்ப்பணம்பண்ணுகின்றனர், ஆனாலும் ஒரேவிதமான அனுபவங்களுக்கு ஒத்திருப்பதுபோன்று, ஒரு வகுப்பார் கர்த்தருடைய அனுபவங்களைத் துல்லியமாய்ப் பின்தொடர்கின்றனர்; ஆனால் போக்காட்டினால் அடையாளப்படுத்தப்படும் மற்ற வகுப்பாராகிய திரள் கூட்டத்தார், சிறுமந்தையினர் போன்றே சுயத்தைப் பலிசெலுத்துவதற்காக முழுமையான அர்ப்பணிப்பைப் பண்ணினாலும், இதைச் செய்யாமல், தங்கள் ஜீவியங்களைப் பலியாய் ஒப்புக்கொடுப்பதைச் செய்யத் தவறிப்போவதால், கர்த்தராம் இயேசுவின் நாட்களில் ஆவியானது இரட்சிக்கப்படத்தக்கதாக, மாம்சமானது அழிக்கப்படும் அனுபவத்திற்குள் கடந்துசெல்கின்றனர் (1கொரிந்தியர் 5:5). இந்த இரண்டு வகுப்பாரும் வெளிப்படுத்தல் 7-ஆம் அதிகாரத்தில் வேறுபடுத்திக் காண்பிக்கப்பட்டுள்ளனர். சிறுமந்தையினராகிய 1,44,000-பேர், அதாவது ஆவிக்குரிய இஸ்ரயேலர்கள் – மகிமைப்படுத்தப்படும் கிறிஸ்துவினுடைய சரீரத்தின் உண்மையுள்ள அங்கத்தினர்களாய்க் காணப்படுகின்றனர்; மற்ற வகுப்பாராகிய திரள் கூட்டத்தினரின் எண்ணிக்கையானது கர்த்தரினால் நிர்ணயிக்கப்படவில்லை; இவர்கள் உபத்திரவத்தின் வாயிலாகக் கடந்துவந்து, சிங்காசனத்தில் ஜெயங்கொள்பவர்களெனக் கிரீடங்களைப் பெற்றுக்கொள்வதற்குப் பதிலாக, ஊழியக்காரர்களெனச் சிங்காசனத்தின் முன்னிலையில் குருத்தோலைகளைப் பெற்றுக்கொள்கின்றனர்.
இரண்டு வெள்ளாட்டுக்கடாக்கள் இடையே சீட்டுப்போடுதல் என்பது, யார் யார் இந்த இரண்டு வகுப்பார்களுக்குள் கடந்துசெல்வார்கள் என்று கர்த்தர் தாமாய்த் தீர்மானிப்பதில்லை என்பதையும், அவர் இக்காரியத்தினை நம்மிடமே விட்டுவிட்டவராக, யார் பலியில் சரியான பக்திவைராக்கியத்தினை வெளிப்படுத்தி, இப்படியாகத் தங்களது நேர்மைக்குச் சான்றுபகிர்ந்து, தாங்கள் தேவனின் நேசகுமாரனுடைய சாயலில் இருப்பதை வெளிப்படுத்துகின்றார்களோ, அவர்கள் யாவரையும் அவர் ஏற்றுக்கொள்வார் என்பதையும் சுட்டிக்காட்டுகின்றது. இக்காரியமானது கர்த்தருக்கு அர்ப்பணம்பண்ணுவது மாத்திரம் போதாது, இன்னுமாக நாம் உண்மையில் கர்த்தருடைய ஆடு வகுப்பாராகிட வேண்டுமெனில், நமது உடன்படிக்கையினுடைய நிபந்தனைகளை நிறைவேற்ற நாம் தொடர்ந்திட வேண்டும் – நாம் பாடுபட வேண்டும், நாம் பலிசெலுத்திட வேண்டும் மற்றும் இவ்வாறாக ஆசாரியனுடைய சரீரத்தின் அங்கத்தினர்களென நமது அழைப்பையும், தெரிந்துகொள்ளுதலையும் நாம் உறுதிப்படுத்திக்கொள்ள நாடிட வேண்டும் என்பதைச் சுட்டிக்காட்டுகின்றதாய் இருக்கின்றது.
யேகோவாவிற்கு அல்லது அசசேலுக்கு
“விசேஷித்த பலிகள் குறித்த ஆசாரிப்புக்கூடார நிழல்கள்” எனும் சிறு புஸ்தகத்தினை நமது வாசகர்கள் அனைவரும் கைகளில் பெற்றிருப்பார்கள் என்று எண்ணி, இங்கு நாம் இந்தப் பாவநிவாரண நாளின் விவரங்கள் அனைத்திற்குள்ளும் செல்வதில்லை; ஏனெனில் அப்புஸ்தகத்தில் இவ்விஷயங்களானது போதுமான அளவுக்கு விவரமாகக் கையாளப்பட்டுள்ளது. இரண்டு வெள்ளாட்டுக்கடாக்கள்மீது விசேஷித்த கவனத்தை இப்பாடத்தில் கொடுக்கின்றோம்.
எபிரெயர்கள் மத்தியில் வெள்ளாட்டுக்கடாக்கள்மீது சீட்டுப்போடப்படுகையில், ஓர் ஆடு யேகோவாவிற்கு என்றும், மற்ற ஆடு அசசேலுக்கு என்றும் அறிவிக்கப்படுகின்றது. அசசேல் எனும் வார்த்தைக்கான அர்த்தம் மிகவும் தெளிவாய்த் தெரியவில்லை, ஆனாலும் பெரும்பான்மையான நவீனகால மேதைகளைப் பொறுத்தமட்டில், அவ்வார்த்தையானது இருளின் அதிபதிக்குப் பொருந்துகின்றதாய் இருக்கின்றது; மில்டன் அவர்களின் “பாரடைஸ் லாஸ்ட்” (“Paradise lost”) எனும் படைப்பில் அசசேல், நரகத்தின் சேனைகளுக்குத் தலைவரென – பிசாசுகளின் அதிபதியெனச் சித்தரிக்கப்பட்டுள்ளார். இந்த விளக்கத்திற்கு நாங்கள் ஒப்புதல் தெரிவிக்கின்றோம், ஏனெனில் இது அப்போஸ்தலனுடைய கருத்திற்கு இசைவாய்ப் பொருந்துகின்றதாகவே இருக்கின்றது; அப்போஸ்தலன் கிறிஸ்துவின் சரீரத்தினுடைய அர்ப்பணிக்கப்பட்ட அங்கத்தினர்களிலுள்ள ஒரு வகுப்பாரைக்குறித்துக் குறிப்பிடுகையில், அதாவது தங்களுக்குக் கிடைத்த சிலாக்கியங்களுக்கு இசைவாய் ஜீவிக்காத இந்த வகுப்பாரைக்குறித்துக் குறிப்பிடுகையில், “நான் சரீரத்தினாலே உங்களுக்குத் தூரமாயிருந்தும், ஆவியினாலே உங்களோடேகூட இருக்கிறவனாய், அப்படிப்பட்டவனுடைய ஆவி கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாளிலே இரட்சிக்கப்படும்படி, மாம்சத்தின் அழிவுக்காக, நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே அவனைச் சாத்தானுக்கு ஒப்புக்கொடுக்க வேண்டுமென்று தீர்ப்புச்செய்கிறேன்” (1கொரிந்தியர் 5:3-5) என்று கூறுகின்றார். இதுபோலவே அர்ப்பணம்பண்ணியும், [R4035 : page 232] தானாய் மனமுவந்து வந்து பலிசெலுத்திட தவறுகிறவர்களாகவும் காணப்படுகின்ற திரள் கூட்டத்தினர், சாத்தானால் குட்டப்படத்தக்கதாக அவனிடம் ஒப்புக்கொடுக்கப்படுவார்கள் என்றும், மகா உபத்திரவத்திற்குள் கடந்துசெல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்றும், இப்படியான விதத்தில் அவர்கள் பாவத்திற்காக முறையாய் வருந்தவும், சத்தியம் மற்றும் நீதியின் திவ்விய தரநிலையினை முறையாய் உணர்ந்துகொள்ளவும்தக்கதாக இப்படி ஒப்புக்கொடுக்கப்படுவார்கள் என்றும் நாங்கள் புரிந்துகொள்கின்றோம். இந்தப் புறக்கணிக்கும் வகுப்பாரில் சிலர் யுகம் முழுவதும் காணப்பட்டபோதிலும், இவர்களில் பெரும்பான்மையானவர்கள் இந்த யுகத்தினுடைய முடிவிலேயே காணப்படுவார்கள் என்று வேதவாக்கியங்கள் சுட்டிக்காட்டுகின்றது.
போக்காடு என்பது பாவத்தை விரும்புகிற ஒரு வகுப்பார் அல்ல, கர்த்தரை மறுதலித்த வகுப்பாரும் அல்ல; மாறாக இந்த ஜீவியத்தின் கவலைகளினாலும், ஐசுவரியங்களின் வஞ்சனைகளினாலும் பாரமடைகின்றவர்களாக இருந்து, அனைத்தையும் விட்டுவிட்டு சுயத்தைப் பலிசெலுத்தும் பாதையில் ஆண்டவருடைய அடிச்சுவட்டில் நடப்போம் என்ற தங்களது உடன்படிக்கைக்கும் மற்றும் கர்த்தருக்கும் போதுமான அளவு உண்மையாக இராதவர்களாகக் காணப்படுகின்ற அர்ப்பணம்பண்ணியுள்ள விசுவாசிகளின் ஒரு வகுப்பார் ஆவார்கள். இந்நாளில் குறிப்பாய் பெரும் எண்ணிக்கையில் காணப்படும் இந்த வகுப்பார், [R4036 : page 232] எந்த ஜாதியார் தோன்றினது முதற்கொண்டு இராததும், இந்த யுகத்தினை முடித்துவைக்கின்றதுமான மகா உபத்திரவ காலத்தில் பாடுபடத்தக்கதாக, எதிராளியானவனிடம் ஒப்புக்கொடுக்கப்படுவார்கள். இந்த உபத்திரவங்களுக்கு இணங்கவும், கர்த்தரை நாடவும் தவறுகிறவர்கள் இரண்டாம் மரணத்தில் மரிப்பார்கள்; ஆனாலும் உண்மையாயும், நேர்மையாயும் செவிகொடுப்போர், ஜெயங்கொண்டவர்களென எண்ணப்பட்டு, வெளிப்படுத்தல் 7-ஆம் அதிகாரத்தில் காண்பிக்கப்பட்டுள்ளதுபோன்று குருத்தோலைகள் கொடுக்கப்பட்டு, ஆட்டுக்குட்டியானவரின் கலியாண விருந்திலும், அக்கலியாணத்திற்குரிய மகிமைகள் மற்றும் கனங்களிலும் பங்கெடுப்பதற்குரிய சிலாக்கியம் பெற்றுக்கொள்வார்கள். தானாய் மனமுவந்து பலிசெலுத்துவதற்குரிய தங்களது தற்கால சிலாக்கியங்களை இவர்கள் உணர்ந்துகொள்ள தவறினதே மணவாட்டி வகுப்பாரில் அங்கத்துவம் பெற்றுக்கொள்வதிலிருந்து இவர்களைத் தடுத்தது; மேலும் இவர்களது கனமிக்க ஸ்தானம் மணவாட்டியுடன்கூடச் செல்லும் கன்னிகைகளாக, தோழிகளாக இருப்பதேயாகும். (சங்கீதம் 45:14)
இரண்டு வகையான பாவங்கள்
இந்தப் போக்காடானது பலிசெலுத்தப்படுகிறதில்லை; இது கர்த்தருடைய பலிபீடத்தின்மீது வைக்கப்படுகிறதில்லை; மாறாக “மாம்சம் அழிக்கப்படத்தக்கதாக” வனாந்தரத்திற்கு அனுப்பிவைக்கப்படுகின்றது. பலிசெலுத்தப்படுவதற்கும், அழிக்கப்படுவதற்கும் இடையிலுள்ள பெரிய வித்தியாசமானது கவனிக்கப்பட வேண்டும் மற்றும் புரிந்துகொள்ளப்பட வேண்டும். (எந்த மிருகங்களின் இரத்தமானது பாவநிவாரணம் உண்டாகத்தக்கதாகத் திரைக்குள்ளாகக் கிருபாசனத்தின்மீது கொண்டுவரப்பட்டதோ) அந்த மிருகங்களின் சரீரங்களானது பாளயத்திற்குப் புறம்பே சுட்டெரிக்கப்படுகின்றது என்று நமக்கு அப்போஸ்தலன் நினைப்பூட்டி, பின்னர் “நாம் அவருடைய நிந்தையைச் சுமந்து, பாளயத்துக்குப் புறம்பே அவரிடத்திற்குப் புறப்பட்டுப் போகக்கடவோம்” (எபிரெயர் 13:13) என்று உண்மையுள்ளவர்களுக்கு வலியுறுத்துகின்றார். இப்படியாக அந்த மிருகங்களில் ஒன்று நமது கர்த்தர் இயேசுவுக்கு அடையாளமாய் இருக்கின்றது என்றும், ஒருவேளை நாமும் அவரது நிந்தைகளைச் சுமக்கத்தக்கதாக அவரோடுகூட பாளயத்துக்கு வெளியே செல்வதற்கும், இவைகளில் அவரது சரீரத்தின் அங்கத்தினர்களெனப் பங்கடைவதற்கும் விருப்பமாயிருப்போமானால், நாம் கர்த்தருடைய ஆட்டினால் அடையாளப்படுத்தப்படுவோம் என்றும் அப்போஸ்தலன் சுட்டிக்காட்டுகின்றார்.
நம்முடைய இந்தப் பாடத்தில் குறிப்பிடப்படும் இரண்டு வகையான பாவங்களைக்குறித்துப் பார்க்கலாம்; ஒருவகை பாவமானது, காளை மற்றும் கர்த்தருடைய ஆட்டின் இரத்தத்தினால் மகா பரிசுத்த ஸ்தலத்தில் நிவிர்த்தி செய்யப்படுகின்றது; மற்றவகை பாவமானது, போக்காட்டின் தலைமீது அறிக்கையிட்டு, சுமத்தி அனுப்பிவைக்கப்படுகின்றது. நிவிர்த்தி செய்யப்பட்ட பாவமானது ஆதாமின் பாவமாகும்; இந்த ஆதாமின் பாவம் காரணமாக, மரணதீர்ப்பானது அனைவர்மீதும் கடந்துவந்தது மற்றும் இப்படியாகப் பெலவீனங்களும், அபூரணங்களும் அனைவர்மீதும் கடந்துவந்தது. இதுவே ஆதி பாவம் என்று அழைக்கப்படுகின்றது மற்றும் இதன் சாபம் அல்லது தீமைகளானது ஒட்டுமொத்த சந்ததியின்மீதும் காணப்படுகின்றது. ஆனால் ஆதி பாவம் மற்றும் இதனால் நாம் சுதந்தரித்துக்கொள்ளும் பெலவீனங்கள் மற்றும் அபூரணங்கள் தவிர்த்து, வேறு பாவங்களும் இருக்கின்றன; அதாவது விசுவாச வீட்டாரைப் பொறுத்தமட்டில் கர்த்தரினால் ரத்து செய்யப்பட்டதும், உலகத்தாரைப் பொறுத்தமட்டில் ரத்து செய்யப்படுவதற்குக் கர்த்தரினால் ஒழுங்குபண்ணப்பட்டதுமான இந்த ஆதி பாவம் தவிர்த்து வேறு பாவங்களும் இருக்கின்றன. இந்த மற்றவகை பாவங்களானது, அக்கிரமங்கள், மீறுதல்கள் என்று வரையறுக்கப்படுகின்றது; அதாவது காளை மற்றும் கர்த்தருடைய ஆட்டின் இரத்தத்தினால் நிவிர்த்தி செய்யப்படும் பாவங்கள் அல்லாத மற்ற அனைத்துப் பாவங்களையும் உள்ளடக்குகின்றது.
உலகத்தின், அதிலும் விசேஷமாகக் கிறிஸ்தவ மண்டலத்தின் இந்த மீறுதல்களை அல்லது அநியாயங்களை நாம் பார்த்தாலே புரிந்துகொள்ளலாம். இன்று போதுமான அளவுக்கு வெளிச்சமானது உலகத்தார்மீது, அதிலும் விசேஷமாக நாகரிகமான ஜனங்கள்மீது பிரகாசித்துக்கொண்டிருக்கிறது. யூதருடைய நியாயப்பிரமாணத்தினால் முன்வைக்கப்பட்டதும், பிற்பாடு கர்த்தர் மற்றும் அப்போஸ்தலர்களினால் விரிவுபடுத்தப்பட்டதுமான நீதியின் கொள்கைகளானது, நீதி-அநீதி தொடர்பாகவும், சரி-தவறு தொடர்பாகவும், நன்மை-தீமை தொடர்பாகவும் ஜனங்களின் மனங்களைப் பிரகாசிப்பித்துள்ளபடியால், இப்பொழுது வாழ்ந்துகொண்டிருக்கும் சந்ததியார் அதிகப் பொறுப்பை உடையவர்களாய்க் காணப்படுகின்றனர். இப்படி அறிவு அதிகரித்து இருந்தபோதிலும், உலகமெங்கும் கடுமையான மீறுதல்கள் இருந்தபோதிலும், உலகத்தின் காரியங்களை, பொருளாதாரக் காரியங்களை, சமுதாயக் காரியங்களை, மதக் காரியங்களைச் சமப்படுத்துவதற்கு மற்றும் சரிப்படுத்துவதற்கு ஏதுவாய் எதையேனும் செய்துவிடுவதற்கு வெகு சொற்பமானவர்களே விருப்பமாய் இருப்பதை நாம் காண்கின்றோம். நன்மையானவைகளை வைத்திருக்கும் பெரும்பான்மையானவர்களோ, தாங்கள் நேர்மையற்றவர்கள் என்றும், அநீதியானவர்கள் என்றும் அடையாளம் கண்டுகொண்டபோதிலும், அந்த நன்மைகளைத் தங்களுக்கென்றே வைத்துக்கொள்ள விருப்பமுள்ளவர்களாய்க் காணப்படுகின்றனர்.
இதற்கிடையில் தங்கள் உரிமைகளுக்காகவும், அநியாயங்களுக்கு எதிராகவும் அதிகமதிகமாய்க் கூக்குரலிட்டுக்கொண்டிருக்கும் ஜனக்கூட்டத்தாரையும் விடியலின் வெளிச்சமானது விழித்தெழப் பண்ணிக்கொண்டிருக்கின்றது. இச்சூழ்நிலைகளைக் கர்த்தர் அனுமதித்துக்கொண்டு மாத்திரம் இராமல், இதற்கு ஆதரவாகவும் இருக்கின்றார்; இதற்கு உதவிக்கொண்டும் இருக்கின்றார் மற்றும் இதன் விளைவாக ஜாதிகள் தோன்றினது முதற்கொண்டு இராத ஓர் உபத்திரவ காலம் வரும் என்றும் நமக்குத் தெரிவித்துள்ளார். இந்த மாபெரும் இறுதிப் போராட்டத்தில் உலகத்தின் இராஜாக்கள் – பொருளாதாரம், சமுதாயம், மதம் மற்றும் அரசியலானது கருத்து வேறுபாடில்லாமல் ஒரு பக்கத்தில் நிற்பார்கள் என்றும், மறுபக்கத்தில் கர்த்தருடைய “மகா சேனை” நிற்கும் என்றும், இந்த ஜனங்களின் நியாயங்களுக்காகவும், உரிமைகளுக்காகவும் கர்த்தர் வழக்காடுவார், போராடுவார் என்றும் கர்த்தர் நமக்குத் தெரியப்படுத்துகின்றார். உண்மைதான் கர்த்தர் தங்கள் சார்பில் இருக்கின்றார் என்பதைச் சாதாரண ஜனங்கள் உணர்ந்துகொள்ளமாட்டார்கள் மற்றும் இவர்களில் அநேகர் அவரைப் புறக்கணித்து, தங்கள் சொந்தத் திட்டங்கள், உபாயங்கள், பொதுவுடமை கொள்கைகள் முதலானவைகள்மீது மட்டும் நம்பிக்கையினை வைப்பவர்களாகவும் காணப்படுவார்கள். இதுபோலவே பூமியின் இராஜாக்கள் மற்றும் பிரபுக்கள் மற்றும் இவர்களது சேனைகளின் சார்பில் நிற்பவர்களும்கூட, தாங்கள் எவ்வகையான யுத்தத்தில் ஈடுபட்டிருக்கின்றனர் என்பதையும், நீதியின் ஆளுகைக்காக – தேவனுடைய நேச குமாரனின் இராஜ்யத்திற்காக – ஆயிர வருஷ இராஜ்யத்திற்காகப் பூமியினை ஆயத்தப்படுத்தத்தக்கதாக, தற்காலத்தின் அமைப்புகளைக் கவிழ்த்திடும் நோக்கத்தில் கர்த்தர் இந்த யுத்தத்தில் பங்கெடுக்கின்றார் என்பதையும் அடையாளம் கண்டுகொள்ளாமல் இருப்பார்கள்.
இப்பொழுது போக்காடு வகுப்பாரைப் பார்க்கலாம்:- இவர்கள் தங்களது பலியின் உடன்படிக்கைக்கு உண்மையற்றுப்போவதால், இவர்கள் உலகத்தின்மீது வரப்போகும் காரியங்களிலிருந்து தப்பிப்பதற்கு அபாத்திரர்களாகக் கருதப்படுவார்கள்; இவர்கள் தேவனுடைய உண்மையான பிள்ளைகளாக இருந்தபோதிலும் இந்த ஜீவியத்தின் காரியங்களினால் பாரமடைந்து, தங்கள் உடன்படிக்கையினை நிறைவேற்றிடுவதற்கும், இராஜ்யத்தில் பங்கடைவதற்கும் போதுமான வைராக்கியத்துடன் இராததால், இவர்கள் அந்த உபத்திரவத்தில் மாயக்காரர்களோடும், உலகத்தாரோடும் தங்கள் பங்கினைப் பெற்றுக்கொள்வார்கள். இந்த வகுப்பார் மீதான இரக்கத்தின் காரணமாகவே, கர்த்தர் இவர்களை அந்த உபத்திரவத்திற்குள் அனுப்புகின்றார்; இதன் கசப்பான அனுபவங்களில் இவர்கள் தேவையான படிப்பினைகளைக் கற்றுக்கொள்ளத்தக்கதாகவும், இறுதியில் நெருக்கடியின்கீழ் அவருக்கும், நீதிக்குமான இவர்களது நேர்மைக்குச் சான்று பகிரத்தக்கதாகவும் கர்த்தர் இவர்களை அந்த உபத்திரவத்திற்குள் அனுப்புகின்றார். இவர்கள்மீது ஜனங்களுடைய மீறுதல்கள் அறிக்கைபண்ணப்படுவதாக – அதாவது திவ்விய நீதியின் கண்ணோட்டத்திலிருந்து இப்படிச் செய்யப்படுவதாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களது சொந்தப் பாவங்களானது, இவர்கள் விசுவாச வீட்டாரின் அங்கத்தினர்களெனக் கருதப்படுவதனால், கிறிஸ்து மூலமாய் மன்னிக்கப்பட்டுவிட்டன. ஆகையால் இவர்களது பாடுகள் மற்றவர்களுடைய பாவங்களுக்காய் ஆகும்; இவர்கள் விரும்பி பலிசெலுத்துபவர்களெனப் பாடுபடாததினால், இவர்களது ஆவி கர்த்தர் இயேசுவின் நாளில் இரட்சிக்கப்படத்தக்கதாக, இவர்கள் அப்போது மரணத்திற்கு ஏதுவாய்ப் பாடுபட அனுமதிக்கப்படுவார்கள்.
அனைத்து நீதிமான்களின் இரத்தப்பழியும் விசாரிக்கப்படுதல்
இதைப்போன்று கிட்டத்தட்ட யூத யுகத்தினுடைய முடிவு காலங்களில் உண்டான உபத்திரவ காலத்தில் பாடுபட்ட வகுப்பார்குறித்த நமது கர்த்தருடைய வார்த்தைகளை நாம் மறவாமல் இருப்போமாக. [R4036 : page 233] ஆபேலின் காலம் முதற்கொண்டு, சகரியாவின் மரணம்வரை சிந்தப்பட்ட அனைத்து நீதிமான்களின் இரத்தம்குறித்து அந்தத் தலைமுறையினரிடத்தில் விசாரிக்கப்படும் என்று அவர் கூறியிருந்தார். இது அநீதிபோன்று தோன்றாலம். அந்தத் தலைமுறையினருடைய நாட்களுக்குப் பல நூற்றாண்டுகள் முன்னதாக நிகழ்த்தப்பட்ட மீறுதல்களுக்காய் ஏன் அந்தத் தலைமுறையினர் தண்டிக்கப்பட்ட வேண்டும்? என்று நாம் கேள்வி கேட்கலாம். கர்த்தர் இது விஷயத்தில் குறிப்பாய்த் தெரிவிக்கிறதில்லை – இது விஷயத்திலுள்ள திவ்விய நீதியின் இவ்விதமான செயல்பாட்டினைக்குறித்து அவர் விவரமளிக்கிறதில்லை; ஆனாலும் நமது கர்த்தருடைய நாட்களில் வாழ்ந்துகொண்டிருந்த தலைமுறையினர், அவர்களுக்கு முந்தியுள்ள தலைமுறையினர் யாவரைக்காட்டிலும் மிக அதிகமான அனுகூலங்களை உடையவர்களாய் இருப்பதினால், இவர்கள் கடுமையான தண்டனைகளுக்குப் பாத்திரமாய் இருக்கின்றனர் என்ற உண்மையில் பதில் காணப்படுகின்றது என்று நாம் நியாயமாய் அனுமானித்திடலாம். நமது கர்த்தர் சுட்டிக்காட்டுவதுபோன்று இவர்களுக்கு முற்காலத்தின் அனுபவங்கள் இருந்தன மற்றும் இவர்கள் தீர்க்கத்தரிசிகளைக் கொண்றுபோட்ட தங்களது பிதாக்களின் செய்கைகளை அங்கீகரியாதிருந்தனர் – ஆனால் பெரும் வெளிச்சத்தினைப் பெற்றுக்கொண்ட இவர்கள் மிக மோசமானதைச் செய்தனர் – தேவகுமாரனைக் கொன்றுபோட்டனர் மற்றும் அவரது சரீரத்தின் அங்கத்தினர்களாகிய, அவரது சபையினைத் துன்புறுத்தினர்.
இது போலவே இந்த யுகத்தினுடைய முடிவிலும், கடந்த காலங்களினுடைய அநீதிகளுக்காகவும், அதிலும் விசேஷமாக இந்தச் சுவிசேஷ யுகம் முழுவதும் நாகரிக தேசங்களில் சிந்தப்பட்ட பரிசுத்தவான்கள் அனைவருடைய இரத்தத்திற்காகவும் கர்த்தர் வாழ்ந்துகொண்டிருக்கும் தலைமுறையினரிடத்தில் கணக்கினை விசாரிப்பார் என்றும் வேதவாக்கியங்கள் சுட்டிக்காட்டுகின்றன. கடந்த காலங்களில் பரிசுத்தவான்களுக்குச் செய்யப்பட்ட அநேகமான தீமைகளுக்கு இதுவரை தண்டனை வழங்கப்படவில்லை என்று நாங்கள் எண்ணுகின்றோம். கர்த்தருடைய நாமத்தைக்கொண்டும், மதத்தின் பெயரைக்கொண்டும் இயங்கிவரும் மாபெரும் அமைப்புகளானது உண்மை சபையினைத் துன்புறுத்தினபோதிலும், அவை செழித்தோங்கிக்கொண்டிருக்கின்றன மற்றும் அவை தங்களுக்கான நியாயமான பலனை இன்னமும் பெற்றுக்கொள்ளவில்லை. கடந்த காலங்களில் மரித்த சில இரத்தச் சாட்சிகளானவர்கள், ஐந்தாம் முத்திரையின்கீழ், “பரிசுத்தமும் சத்தியமுமுள்ள ஆண்டவரே, தேவரீர் பூமியின்மேல் குடியிருக்கிறவர்களிடத்தில் எங்கள் இரத்தத்தைக்குறித்து எதுவரைக்கும் நியாயத்தீர்ப்புச் செய்யாமலும் பழிவாங்காமலும் இருப்பீர் என்று மகா சத்தமிட்டுக் கூப்பிட்டார்கள்” என்று நமக்குச் சாட்சி மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது (வெளிப்படுத்தல் 6:10). இது உண்மையில் மரித்துப்போனவர்களாகவும், உயிர்த்தெழுவது வரையிலும் எதைக்குறித்தும் அறியாதவர்களாகவும், அறிந்துகொள்ள முடியாதவர்களாகவும் காணப்படுபவர்களுக்குப் பிரதிநிதியென, பழிவாங்குதலுக்கு நீண்ட காலமாகக் கூக்குரலிட்டுக் கொண்டிருக்கும் நீதியினை அடையாளப்படுத்திக் காண்பிக்கும் காட்சியாகும். நீதியினுடைய ஆசனத்திற்கு முன்பு ஏறெடுக்கப்பட்ட இந்த வேண்டுதலுக்குப் பதில்கொடுக்கப்பட்டது. இதுபோலவே மற்றவர்களும் துன்பப்படுத்தப்பட்டு முடியும்வரைக்கும் கொஞ்ச காலம் காத்திருக்க வேண்டும் என்று நமக்குச் சொல்லப்பட்டுள்ளது; பின்னர் வரும் நியாயத்தீர்ப்பானது ஒட்டுமொத்த கணக்கையும் சரிக்கட்டிவிடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவே நெருங்கி வந்துகொண்டிருக்கும் பயங்கரமான உபத்திரவமாகும் – அப்போது மகா பாபிலோனானது, மகா ஏந்திரக்கல்லெனக் கடலுக்குள் எறியப்படும்; அப்பொழுது ஒவ்வொரு மனுஷனுடைய கையும், குழப்பத்தின் மத்தியில் தன் அயலானுக்கு விரோதமாய்க் காணப்படும்; அப்போது வெளியே செல்கிறவனுக்கு அல்லது உள்ளே வருகிறவனுக்குச் சமாதானம் இராது; அது எந்த ஒரு ஜாதியார் தோன்றினது முதற்கொண்டு இராததும், இனிமேல் தோன்றாததுமான ஓர் உபத்திரவ காலமாய் இருக்கும்.
இந்த உபத்திரவத்திலிருந்து சிறுமந்தையினர், அதாவது உண்மையாய்ப் பலி செலுத்துபவர்களாகிய கர்த்தருடைய ஆடு வகுப்பினர் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தப்பித்துக் கொள்வார்கள்; திரள் கூட்ட வகுப்பினரோ இதினின்று தப்பித்துக்கொள்ளாமல், மாறாக பங்கடைவார்கள். இவர்கள் இந்த மகா உபத்திரவத்திலிருந்து வஸ்திரங்களைத் துவைத்துக்கொண்டவர்களாகவும், ஆட்டுக்குட்டியானவரின் இரத்தத்தினால் வஸ்திரங்களை வெளுக்கப்பெற்றவர்களாகவும் வருவார்கள். இவர்களுடைய பாடுகளானது, இவர்களுடைய வஸ்திரங்களை வெளுக்கப்பண்ணுவதில்லை; மாறாக இவர்கள் பாடுபடும்போது, இவர்கள் ஒருபோதும் இல்லாதளவுக்குத் தேவாட்டுக்குட்டியானவருடனான தங்கள் உறவினைக்குறித்தும், அவரது பாவநிவாரண புண்ணியத்தோடு இருக்கும் உறவினைக்குறித்தும் உணர்ந்துகொள்ள கற்றுக்கொள்வார்கள்; மேலும் விசுவாசத்தின் மூலமாய் அப்புண்ணியத்தினைத் தங்கள் சுத்திகரிப்பிற்காய்ப் பயன்படுத்தவும் அனுமதிக்கப்படுவார்கள்.